Saturday, 18 June 2011

தந்தை - எனக்கு தாயுமானவன்

எல்லா அப்பனுக்கும் இது சமர்ப்பணம் 


Happy Fathers day - 19th June

கருவாக்கி உருவாக்கி உரமானவர் 
தருவாகி தனமாகி தினம் வாழ்பவர் 
திருவாகி திறமாகி திரமானவர்
குருவாகி குணமாகி குலம் ஆள்பவர்!

நின்றாய் விசை அறிந்தோம், நடந்தாய் திசை அறிந்தோம்
வாழ்ந்தாய் விழி மலர்ந்தோம் வளர்த்தாய் வழி அறிந்தோம் 
உழைத்தாய் உயர்ந்தோம் உரைத்தாய் உணர்ந்தோம் 
மரமாய் மலர்கிறாய் மகவாய் மகிழ்கிறோம் !!

எந்நாளும் எமை நினைக்கும் எந்தையே 
அன்புள்ள அப்பாவுக்கு  
இந்நாள் என்ன 
எந்நாளும் தந்தையர் தினமே!!!

றாம் சந்திரலிங்கம்

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி 
இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் 

Friday, 17 June 2011

அவன் இவன்


                                            ஒரு சினிமா விமர்சனம் 

வித்தியாசமான சிந்தனை விபரீதமான எண்ணபடைப்புகள் கொண்ட தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் மற்றுமொரு படைப்பு அவன் - இவன் .
ஆனால் இம்முறை நகைச்சுவை மற்றும் பாசம் செண்டிமெண்ட் துணைகொண்டு விசால் என்ற நடிகனின் வித்தியாச ஆனால் பிரமிக்க வைக்கும் நடிப்பை மட்டும் நம்பி ஒருவரிக்கதையோடு பயணம் பண்ணி இருக்கிறார்.வழமையான வெட்டு குத்து இல்லை, ரத்தம் இல்லை. அருவருப்பு காட்சிகள் இல்லை, நிழல் உலகம் இல்லை, ஒரு ஜதார்த்த வாழ்வியலில் ஒரு அழகிய சினிமா அற்புத நடிப்பு.

மாறுபட்ட கதைக்களம், வித்தியாச திருப்பம், படம் நெடுக நகைச்சுவை, வழமையான பாலாவின் அல்லாத வித்தியாச கிளய்மக்ஸ், இப்படி படம் நெடுக நம்மை ஜோசிக்க வைத்த பாலா, ஆழமற்ற கதை, வலுவில்லா முதற்பகுதி இப்படியும் ஜோசிக்க வைத்துவிட்டார். படம் நெடுக நாம் தேடியது இளையராஜாவை, அவர் குரலில் ஒரு சோககீதம் இல்லை என்பது வருத்தம். யுவனின் இசை ஓகே ரகம் தான் ஆயினும் அவரால் இளையராஜா ஆக முடியாது என்பது இதில் உண்மை.

பாத்திரங்களின் நடிப்பு அற்புதம். விசால்( சிறந்த நடிகர்), ஆர்யா (சிறந்த துணை நடிகர்), அம்பிகா (சிறந்த துணை நடிகை) , ஜி எம் குமார்  மற்றும் ஜனனியின் நடிப்பு அருமை, விருதுகள் நிச்சயம். படம் முடிந்து வெளியே வந்தாலும் கண்களில் நிற்பது ஜிஎம்கேயின் நடிப்பும் அவர் துணிந்து ஆடையின்றி நடித்ததும் தான். அந்த சின்ன பையனையும் மறக்க முடியாது. முழுக்க குடிக்காத மகனே, அம்மாவுக்கும் ஒரு கட்டிங் வையடா - அம்பிகா டாப் கிளாஸ் நடிப்பு, தியேட்டர் குலுங்கியது.

கவனிக்க வேண்டியது ஆதர் வில்சனின் ஒளிப்பதிவு, பின்னணி இசையில் இளையராஜா இல்லையே என்ற ஏக்கம். பாடல்கள் பரவாயில்லை.
காமடிக்காகவும், பாத்திரங்களின் நடிப்புக்காகவும் ஒருமுறை கட்டாயம் பார்க்கலாம்.

விசால் சுப்பர், பாலா ஓகே, 
அவன் + இவன் சமன் எமன்!!

3.5/5

றாம் சந்திரலிங்கம் 

Saturday, 4 June 2011

காதல் வந்தால் சொல்லி அனுப்பு!!


                                                                                                                                   (available என்றால் வருகிறேன் !! )

மையோ மரகதமோ மருகடலோ மழைமுகிலோ
ஐயோ அது இருளோ அதிநிறமோ கரு விழியோ
குய்யோ முறையோ என அது விடும் அம்போ
தெய்யோ தலைவிதியோ அவள் தாளடி தஞ்சம்!

தென்றலடி நீயெனக்கு தீண்டும் தேகமடி நானுனக்கு 
மெத்தையடி நீயெனக்கு மேவும் போர்வையடி நானுனக்கு
வெல்லமடி நீயெனக்கு வழங்கும் வள்ளலடி நானுனக்கு
செல்லமடி நீயெனக்கு இன்பச்சொர்க்கமடி நானுனக்கு!!

பற்றும் என்மனம் உன் நினைவில் உலாவரும்  
சுற்றும் சுடர் விழி எங்கும் உன்முகம் கனாவரும்
முற்றும் துறந்த காதலில் கலங்கும் நிலை வரும்
சற்று முன்பு நிலவரம் எந்தன் நெஞ்சில் கலவரம் !!!

நீ தேனாவதும் நான் வண்டாவதும் நம்கையிலே  
நீ நானாவதும் நான் நீயாவதும் சிந்தையிலே
நீ விண்ணாவதும் நான் முகிலாவதும் விந்தையிலே
நான் ஆணாவதும் இல்லை வீணாவதும் உன்கையிலே!!!!


விழிமூடி நின்றாலும் உன்னுருவம் முன்னால்
துளிநேரம் விடாது உன்நினைப்பு தன்னால்
வழியேதும் இல்லை உனை மறக்க என்னால்
தெளிவாக சொன்னால் அழிந்தேனே உன்னால் !!!!!

அக்கினி 
ச.நித்தியராம் 


Thursday, 28 April 2011

எங்கிருந்தாலும் வா !!!!




சுமை நீ வாங்க சுவை நான் வாங்க 
                   சுகம் நாம் தேடலாம்!

இமை நீ மூட இதழ் நான் தேட 
                  இதம் நாம் காணலாம் !

கரம் நீ தீண்ட கணம் நான் தூண்ட 
                  கதை நாம் பேசலாம் !

சுரம் நீ மீட்ட சுதி நான் கூட்ட 
                  சுபம் நாம் போடலாம்! 

அக்கினி 
ச.நித்தியராம் 

Thursday, 14 April 2011

இது தான் காதலா?


இது தான் காதலா?

தனிமையில் சிரிப்பு கனிந்து தான் கதைப்பு
பனியிலும் நடப்பு இனிமையாய் இருப்பு  
இனிப்பு புளிக்கும் இன்னமும் நடக்கும் 
சனியன் என்பார் வீட்டில் சந்தோசம் என்பன்.

உண்மையில் Zero, Hero போல் வண்ணம் 
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் எண்ணம் 
கண்ணோடு காண்பதும் காதோடு கேட்பதும் 
நின்றுதான் நினைப்பதும் நினைவோடு இல்லை !

சொல்வது விளங்காது செல்லுமிடம் தெரியாது 
நில்லென்றால் நடப்பு நிற்காமல் நினைப்பு 
தில்லென்று ஒன்றில்லை திக்கெல்லாம் பறப்பு
வில்லென்று உடல் இங்கு வீரென்று மனம் எங்கோ ?

அக்கினி 
ச.நித்தியராம் 



Saturday, 12 February 2011

சுந்தரியே ஒரு வார்த்தை சிந்தி விடு

அன்புள்ள உயிருக்கு

வண்ணமலர்த் தோட்டம் வாடிக் கிடக்குது
எண்ணமெங்கும் உன்பெயர் தேங்கிக் கிடக்குது
திண்ணமுடன் வந்து திருந்தாத இதயத்தில்
கொண்டு வந்த காதலை கொல்லாமல் கொலுவேற்று

மஞ்சமதில் நிலைத்திருக்க மான்விழியே வந்துவிடு
வஞ்சி உனை கெஞ்சுகிறேன் வசந்தத்தை தந்துவிடு
பிஞ்சுமனம் உனைத்தானே தஞ்சமென்று வந்துவிட்டேன்
நெஞ்சினிலே ஓரிடத்தை கொஞ்சமாக தந்துவிடு

சந்தோஷ வாழ்வில் சாதனைகள் செய்வோம்
செந்தூர உலகில் சுதந்திரமாய் திரிவோம்
சிந்தும் சிரிப்பில் ஆன்மாவை சிக்க வைக்கும்
சுந்தரியே ஒருவார்த்தை சிந்திவிடு

இப்படிக்கு உடல் 

அக்கினி
ச. நித்தியராம்