Wednesday, 10 November 2010

வரவேண்டும் வசந்தம் அதை தரவேண்டும் நீயே!


சிந்தைஉருகி உன் சிலையடி வந்தேன்
சந்தமுருகி வந்தனம் தந்தேன்
விந்தை புரியும் வேலா வடிவழகா உன்
பந்தம் எனக்கு வேணும் தருவாயா

விதியோடு சதிசெய்யும் வினைபோதும் என்று
நதியோரம் நீவாழும் கதிர்காமம் வந்தேன்
சுதியான செல்வங்கள் புகழ் வேண்டாம் நீயே
கதி என்று வாழும் உன் நினைவொன்று போதும்

மருள் நீங்க வேண்டும் நாட்டில் உன்
அருள் ஓங்க வேண்டும் மக்கள்
தெருச்சண்டை மதச்சண்டை இனயுத்தம் நீங்கி
வரவேண்டும் வசந்தம் அதை தரவேண்டும் நீயே

தாயென்று உன்னை நம்பி பல உயிர்கள் வாழுது
தாவென்று ஒன்றும் நாம் கேட்க மாட்டோம்
சேயென்று நீ எண்ணிச் செய்யத்தான் வேண்டும் உன்
சேவடியே கதியென்று வருகின்ற அடியாரை

தீர்த்தங்கள் ஆடி திருநீறும் சூடி
மூர்த்தியுனை பார்த்து மனம் வேண்டுது
வார்த்தையில்லை வடிக்க வேலா எம் துன்பத்தை
தீர்வொன்றை தந்து திருத்திவிடு நாட்டை !

அக்கினி
ச.நித்தியராம்

No comments:

Post a Comment