Saturday, 13 November 2010

வேர்வையில் விளைவது வாழ்க்கை; வேர்வையை வெல்லுமோ ஊழ்க்கை?



November 13 2010 இன்று வாலிபக்கவி வாலியின் 80 வது பிறந்த தினம், கவிதையால் உலகை வென்ற வாலி சிறந்த எழுத்தாளனும் கூட. என்னை ஈர்ர்த்த நான்கு கவியாளர்களில் முதலிடம் கண்ணதாசனுக்கு, அடுத்தது வாலிக்கு . ஆக வாலியின் எழுத்துக்களில் எனக்கு பிடித்த ஒன்று இங்கே. 



'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்கிறது தொல்காப்பியம்.
ஒரு சொல் ஒரு பொருளைக் குறிக்கலாம்; ஒன்றுக்கு மேலும் குறிக்கலாம்; அது வியப்பல்ல! ஆனால், ஒரு சொல்லுள் ஓரைந்து சொற்கள் உள!
அந்தச் சொல்தான் 'வாழ்க்கை'!


'வாழ நினைத்தால் வாழலாம்' எனும் கண்ணதாசன் பாட்டுக்கு உரிய வியாக்கியானம் - 'வாழ்க்கை ' எனும் ஒரு சொல்லுள் ஒளிந்துகிடக்கிறது. 
அதனை  ஓர்வார், வெற்றித் தேரில்  ஊர்வார்!


வறுமையிலே வாடிகொக்ண்டு, வாழ்க்கை தமக்கு வாய்க்கவில்லையே  என -மூக்கைச் சிந்துவோருக்கு எல்லாம் ஒன்று சொல்லுவேன்.
'ஊழிற் பெருவலி யாவுள' என்பது, ஒருபுறம் இருக்கட்டும். 'வாழ்க்கை' எனும் சொல்லை -அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துப் பாருங்கள்...
அந்த ஊழ், ஆகும் கூழ்!
நொந்தாரையும்; நொந்து நொந்து வெந்தாரையும்  பார்த்து... வாழ்க்கையின் முதல் எழுத்து அழைக்கின்றது 'வா' என்று;
முதல் எழுத்தும் இரண்டாம் எழுத்தும் சேர்ந்து 'வாழ்' என்கிறது.
எதனை நம்பி என்னும் கேள்விக்கு, நான்காம் எழுத்து நவில்கின்றது விடை  'கை ' என்று;
அதுமட்டும் அல்ல,கை கொண்டு உழைத்தாலும் , காக்க வேண்டியது ஒன்று உண்டு என்று சொல்கிறது - முதல் எழுத்தும், மூன்றாம் எழுத்தும், நான்காம் எழுத்தும்
சேர்ந்து 'வாக்கை' என்று;
மேற்சொன்ன கருத்தை  உள்வாங்கி உழைத்தால்  - நீ பெறுவது  என்னவென்று முதல்
எழுத்தும் நான்காம் எழுத்தும் சேர்ந்து சொல்கிறது 'வாகை' என்று!


'வா';
'வாழ்';
'கை';
'வாக்கை ';
'வாகை '; - எனும் அய்ந்து சொற்களை  தன்னுள் சூல்கொண்டு நிற்கும் ஒரே  சொல் 'வாழ்க்கை'!
ஆக, அடியேன்  அறிவிப்பது ஆதெனில்.. வாழ்க்கை என்பது மழை நாளில் உன்வீட்டு வாசலில் முளைக்கும்  நாய்க்குடை  அல்ல; அது நிழற்குடை!
தாரித்திரிய வெயில் தழல் பரப்பி, உனைத் தகிக்கையில் - உனக்கு நிழல் பரப்பி உதவவல்ல அந்த  நிழற்குடையை, நீதான் முயன்று முன்னின்று வனைந்தெடுக்க வேண்டும் !
நாய்க்குடை  - வான் வடிக்கும் நீரில் விளைவது;
நிழற்குடை, 
உனது ஊன் வடிக்கும் நீரில்  உண்டாவது!
வேர்வையில் விளைவது வாழ்க்கை; வேர்வையை வெல்லுமோ ஊழ்க்கை?'


அக்கினி 
ச.நித்தியராம் 

No comments:

Post a Comment